×

2026க்குள் தரைப்பாலங்கள் இல்லாத தமிழகம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர்  கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பவள விழா நினைவுத்தூணை திறந்து வைத்து, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இலச்சினையையும், பவள விழா மலரையும் வெளியிட்டார்.

மேலும், திருப்பூர், நாமக்கல், திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ரூ.2,123 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டிலான 32 சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழ்நாடு அரசின், நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழா நிகழ்ச்சியை விழாவாக மட்டும் நடத்தி முடித்துவிடாமல், பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் என்ன நினைப்பேன் என்று நான் சொல்லாமலேயே என் கண் ஜாடையை புரிந்துகொண்டு செயலாற்றுவதில் எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார் என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர் எ.வ.வேலு. எதிலும் வல்லவர் வேலு.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை 1946ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பில் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு முழு முதற்காரணம் நெடுஞ்சாலை துறை தான். 1954ம் ஆண்டு நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி  நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுதான் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஆராய்ச்சி நிலையம்.

கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் 1972ம் ஆண்டிலேயே கிராமப்புறங்களில் சாலைகளை உருவாக்கிட தனியாக ஒரு அலகினை நெடுஞ்சாலத்துறையில் தோற்றுவித்து கிராமப்புற சாலைகள் உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் அவர் வித்திட்டார். 1972ம் ஆண்டு 1,500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைக்கக்கூடிய திட்டம் திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

1990ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமத்திற்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1996ம் ஆண்டுக்கு பிறகு 517 கிராமங்கள் இணைப்பு சாலை வசதிகளை பெற்றது. இணைப்பு சாலை வசதி இல்லாத ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற சாதனையும் படைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு மத்திய சூடு கலவை இயந்திரம், அதிர்வு உருளையை அறிமுகப்படுத்தி சாலைகளை உறுதிபடுத்தக்கூடிய பணிகளை நெடுஞ்சாலை துறை செயல்படுத்தியதும் கழக ஆட்சியில் தான்.

1998-99ல் 10 ஆயிரம் சாலைப்பணியாளர் நியமிக்கப்பட்டார்கள்.  சாலை போடுவதில் நிலங்களை கையகப்படுத்துவதில்சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதால் தான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது தான் அது. அதனால்தான் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளக்கூடிய வகையில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். இந்த திட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த 556 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி பிரதிபளிப்பான்கள், தற்காலிக தடுப்பான்கள், சாலை குறியீடுகள் போன்றவை அமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.  ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் குறைந்திருக்கிறது என்று பேசியுள்ளார். இந்த பாராட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு என்று பதிவு செய்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

 கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் நெடுஞ்சாலை துறையினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் துரிதமாக செயல்பட்டு வெள்ள சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்.  இந்த திட்டத்தில் மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கக்கூடிய 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து செரிவின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாகவும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழித்தட சாலைகளாகவும் மேம்படுத்தப்பட உள்ளது.

நெடுஞ்சாலை துறை சாலையில் உள்ள 1,781 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.2,401 கோடியில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக 648 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக ரூ.610 கோடியில் கட்ட எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக இந்த ஆண்டில் 435 தரைபாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.1,105 கோடியில் கட்டப்பட உள்ளது. 2026ம் ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கப்போகிறோம். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையில் இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனிமேல் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று இந்த விழாவில் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். புறவழிச்சாலைகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். நல்ல சாலைகள் அமைத்துள்ளோம் என்றால் தரமான ஆட்சி அமைந்துள்ளது என்று பொருள். அத்தகைய பேரையும், புகழையும் அரசுக்கு பெற்றுத்தர வேண்டும் என இத்துறையில் உள்ள அத்தனை பேரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 75 ஆண்டு பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள 75ஆம் ஆண்டு பவள விழா நினைவு துணை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பவள விழா மலரினை வெளியிட்டார். முன்னதாக விழாவுக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சங்கத் தலைவர் சு.கண்ணன், பொதுச் செயலாளர் தீபக், பொருளாளர் தேன்மொழி, துணைத் தலைவர் த.கண்ணன், முன்னாள் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்  மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

* சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையில்  இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலைக்கு இனிமேல் முத்தமிழறிஞர் கலைஞர்
கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும்.
* போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* நல்ல சாலைகள் அமைத்துள்ளோம் என்றால் தரமான ஆட்சி அமைந்துள்ளது என்று பொருள்.

Tags : Tamil Nadu East Coast Road ,CM BC ,K. Stalin , Ground Bridges, Tamil Nadu, East Coast Road, Artist Name, Chief MK Stalin
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...