கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி மக்கள் நலனுக்கு போராடுவோம்: எதிர்க்கட்சிகளுக்கு கோத்தபய அழைப்பு

கொழும்பு: ‘அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டு, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை வழி நடத்துவோம்,’ என்று எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் கடும் நிதி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

எதிர்க்கட்சிகளும் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால கூட்டணி அரசு அமைப்பதற்காக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவை நீக்கவும், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்கவும் ஒப்புதல் அளித்தார். ஆனால், மகிந்த ராஜபக்சே இதை ஏற்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் புத்த துறவிகளும், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

‘இடைக்கால அரசு அமைக்க ஏதுவாக பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும். இல்லையெனில், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்,’ என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச உழைப்பாளர் தினத்தையொட்டி அதிபர் கோத்தபய நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காக மக்களுடன் இணைந்து அவர்கள் நலனுக்காக போராடுவோம்,’ என்று கூறியுள்ளார். மேலும், அவர், ``மக்கள் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் சவால்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. அதில் இரந்து அவர்களை விடுவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது,’’ என்றும் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் 30% உயர்வு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி உயர்ந்து அந்நாட்டின் பணமதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதம் 18.7% ஆக இருந்த பணவீக்கம் கடந்த மாதம் 29.8% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஒரே மாதத்தில் 11.1% உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த மாரச் மாதம் 30.21 % ஆக இருந்த உணவு பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 46.6 % ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: