×

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா, உலக நாடுகள் உருக்குலையும் உக்ரைன்

* ரஷ்ய ராணுவம் பலமுனை ஆவேச தாக்குதல்
* 200 வீரர்கள் பலி, ஆயுத கிடங்குகள் அழிப்பு
* பதிலடியில் 2 ரஷ்ய எண்ணெய் கிடங்கு தூள்

உக்ரைன்-ரஷ்யா போர் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்று எண்ணிய நிலையில், 3வது மாதமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவும், ஆயுத உதவியும் அளிக்காமல் இருந்தால், உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வந்து இருக்கும். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தங்களின் சுய லாபத்திற்காகவும், ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உக்ரைனை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய இருநாட்டு பிரச்னையை, ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்கி அப்பாவி மக்களின் இனப் படுகொலைக்கு ஒருவிதத்தில் காரணமாகி உள்ளன.

‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அரசியல் தீர்வை எட்டவிடாமல், நேட்டோ நாடுகள் தடையாக உள்ளன,’ என்று ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் சேரும் திட்டத்தை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தத்தால், இத்திட்டத்தை கைவிட்டு மீண்டும் போர்க்களத்தில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
ஒருபுறம் உக்ரைனுக்கு உதவியும், மற்றொரு புறம் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் உலக நாடுகள் விதித்து வருவதால், ரஷ்ய அதிபர் புடின் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்.

இதனால், உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், துறைமுக நகரமான மரியுபோல் போன்றவை ரஷ்யாவின் தாக்குதலில் உருக்குலைந்து வருகின்றன. இதற்கு பதிலடியாக ரஷ்யா எல்லைகள் புகுந்து கடந்த சில வாரங்களாக உக்ரைன் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதை ரஷ்யாவால் ஏற்க முடியவில்லை. இதனால், உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகள், பிரமாண்ட தொழிற்சாலைகள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் ஒரே இரவில் 389 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றும் பல்வேறு இடங்களில் இந்த தாக்குதல் தொடர்ந்தது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனின் 17 ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகளை சேமித்து வைக்க பயன்படும் கிடங்கு, 23 கவச வாகனங்கள்  அழிக்கப்பட்டன. விமானப்படை தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைனின் ஒடேசா நகருக்கு அருகிலுள்ள ராணுவ விமான தளத்தின் ஓடுபாதையும், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கும் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் பகுதியில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 2 உக்ரைன் எஸ்யூ-24எம் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது. இதேபோல் கிழக்கு, தெற்கு உக்ரைன், தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளது.  

இதற்கு பதிலடியாக உக்ரைன் நடத்திய தாக்குதலில், உக்ரைனின் வடக்கே 100 கிமீ தொலைவில், ரஷ்யாவின் பிரையன்ஸ்கில் உள்ள  2 எண்ணெய் கிடங்குகள் சேதமடைந்து உள்ளது. இது, ரஷ்யா அரசின் டிரான்ஸ்நெப்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம்தான் கச்சா எண்ணெய்யை ஐரோப்பாவுக்கு பைப்லைன் மூலம் கொண்டு செல்கிறது. இது, ரஷ்யாவுக்கு விழுத்த பலத்த அடியாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது, ‘சுதந்திரத்திற்கான உங்கள் போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்கவே வந்துள்ளோம். சுதந்திரத்தின் எல்லையில் இருக்கிறோம். உங்கள் போராட்டம் அனைவருக்குமான போராட்டம். அது முடியும் வரை உங்களுடன் நாங்கள் இருப்பது உறுதி,’ என தெரிவித்தார்.

கடந்த வாரம் உக்ரைன் சென்ற அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு துறை அமைச்சர்களும், ‘போர் திசை மாறி உள்ளது. இந்த போராட்டத்தில் உக்ரைன் வெற்றி பெறும். இதற்காக உக்ரைனுக்கு அமெரிக்க கடைசி வரை உதவி செய்யும்’ என்று தெரிவித்தனர். இதேபோல், ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல்’ பல்வேறு நாடுகளும் போரை தொடர உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ரஷ்யா தனது தாக்குதல்களை பலமுனைகளில் இருந்து தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனும் பதிலடி கொடுப்பதால், இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

மே 9ல் ‘நாஜி’களுக்கு எதிராக ரஷ்யா போர்
பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறுகையில், ‘வரும் 9ம் தேதி இரண்டாம்  உலகப் போரின் முடிவின் வருடாந்திர நினைவுநாள் ரஷ்யாவில் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் ‘உலக நாஜிக்களுக்கு எதிராக ரஷ்யா போரை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். நாஜிகள் எல்லா இடங்களிலும் உள்ளனர். அவர்கள் உக்ரைனில் மட்டும் இல்லை; நேட்டோ நாடுகளிலும் நாஜிக்கள் உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ரஷ்யா, இனிமேல் நாஜிகளுக்கு எதிரான  போர் தொடுக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

சொந்த மக்களையே கொல்லும் உக்ரைன்
* மரியுபோலில் உக்ரைன் படைகளே குண்டு வீசி தனது மக்களை கொன்று, தங்கள் நாட்டின் மீது பழி போடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
* ரஷ்யா நடத்திய தாக்குதலில் கீவ் அருகே உள்ள அணை உடைந்ததால், அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனை மிரட்டிய ரஷ்ய போர் விமானங்கள்
நேட்டோவில் சேர விரும்பும் அண்டை நாடுகளை ரஷ்யா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரே இதற்காகதான் நடக்கிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் நாடு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், ஸ்வீடனை எச்சரிக்கும் வகையில் ரஷ்யா போர் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்ததாக கூறப்படுகிறது.

இங்கே வந்து சாகாதீங்க...  :-அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘போரின் ஆரம்ப வாரங்களில் அழிக்கப்பட்ட பிரிவுகளுக்கு பதிலாக ரஷ்யா புதிய வீரர்களை நியமித்து வருகிறது. வரும் வாரங்களில் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இறப்பார்கள், ஆயிரக்கணக்கானோர் காயமடைவார்கள் என்பதை ரஷ்ய தளபதிகள் முழுமையாக புரிந்துள்ளனர். இருந்தாலும், தங்கள் வீரர்களிடம் அவர்கள் பொய் சொல்கிறார்கள். தனது வீரர்களின் பதப்படுத்துவதற்காக கூடுதல் குளிர்சாதன பெட்டிகளை தயார் செய்கிறது. ரஷ்ய வீரர்கள் யாரும் உக்ரைனில் வந்து சண்டையிட வேண்டாம். எங்கள் நிலத்தில் அழிவதை விட, நீங்கள் ரஷ்யாவில் வாழ்வதே மேல்...’ என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரூபிள் அமல்
சர்வதேச அளவில் ரஷ்யா தனது நாட்டின் ரூபிள் மதிப்பை உயர்த்த பல முயற்சியை எடுத்து வரும் நிலையில், உக்ரைனில் போர் மூலம் கைப்பற்றி உள்ள கெர்சனின் தெற்குப் பகுதி, சபோரிஜியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மெலிடோபோல் நகரத்தில் நேற்று முதல் ரஷ்யாவின் ரூபிள் நாணயம் புழக்கத்துக்கு உள்ளது. இந்த பகுதிகளில் சோவியத் யூனியன் நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலையையும் ரஷ்ய ராணுவம் நிறுவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : United States ,Ukraine , United States, World Nations, Ukraine, Russia
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்