×

கிராமசபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு துணை பிடிஓவை தாக்கிய ஊராட்சி பெண் துணை தலைவர் கைது

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென, ஊராட்சி துணை தலைவர் சரண்யா குமார் (36), எழுந்து வந்து தனது காலில் அணிந்திருந்த ெசருப்பை கழற்றி பொதுமக்கள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை அடித்துள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது, பொதுமக்கள் சரண்யா குமாரை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட துணைத்தலைவரை கைது செய்யாததை கண்டித்து கண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதை தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவரை தாக்கியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து சரண்யா குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

‘பழிவாங்கும் நோக்கில் தாக்கினார்’
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், கடந்த மார்ச் 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், துணைத்தலைவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது குறித்து நான் விசாரிக்கும் போது கையில் வைத்திருந்த செல்போனில் நடப்பவைகள் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்தார்.

ஏற்கனவே இவரது கணவர் ஊராட்சி சம்பந்தமான அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விட்டவர் என்ற காரணத்தால், இதுவும் அவதூறு ஆகிவிடும் என உணர்ந்த நான் அங்கிருந்த ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் அவரை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். இந்நிலையில் அனைவர் முன்னிலையிலும் என்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்று நடந்துள்ளார், என்றார்.

Tags : Panchayat , Village council meeting, deputy PDO, panchayat female vice-president, arrested
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு