3வது, 4வது அணிகளால் முடியாது...! பாஜகவை தோற்கடிக்க 2வது அணிதான் ‘பெஸ்ட்’; பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: பாஜகவை தோற்கடிக்க 3வது, 4வது அணிகளால் முடியாது; இரண்டாவது அணியால் தான் முடியும் என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அவரும், காங்கிரஸ் கட்சி வலுபெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், திடீர் திருப்பமாக தான் காங்கிரசில் சேரப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘வரவிருக்கும் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகள் வலுவாக வேண்டும்.

மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியாக உருவாகுமா? அதற்கு நான் உதவுவதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியில்லை. பாஜகவை தோற்கடிக்க மூன்றாவது அல்லது  நான்காவது முன்னணியால் முடியாது. ஆளும் பாஜகவை முதல் முன்னணி என்று கூறினால், அதற்கு அடுத்த இடத்தில் இரண்டாவது முன்னணியால் மட்டுமே அவர்களை தோற்கடிக்க முடியும். அப்படியென்றால் பாஜகவை தோற்கடிக்க மற்றொரு முன்னணி வலுவாக உருவாக வேண்டும்.

அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும். என்னைப் பொருத்தவரை காங்கிரஸ் மட்டுமே இரண்டாவது பெரிய கட்சி என்பதால், அவர்களால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். அதற்காக காங்கிரசை  இரண்டாவது முன்னணி என்று கருதமுடியாது. நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால், அவர்களால் இரண்டாவது முன்னணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்த முடியும். எனவே பாஜகவை தோற்கடிக்க, மற்ற கூட்டணி கட்சிகள் இரண்டாவது முன்னணியை நோக்கி பயணிக்க வேண்டும்’ என்று கூறினார்.

Related Stories: