திருடன், துரோகி கோஷ விவகாரம்; இம்ரான், மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு

லாகூர்: கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் சவூதி அரேபியா சென்றனர். மதீனாவில் பிரதமர் தலைமையிலான குழு சென்ற போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சிலர், ‘திருடன், துரோகி’ என்று கூச்சலிட்டனர். அதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மதீனா போலீசார் பிரதமர் குழுவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் ஐந்து பாகிஸ்தானியர்களை கைது செய்தது.

இதற்கிடையே பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அமைப்பின் தலைவரான இம்ரான் கான், முன்னாள் அமைச்சர்கள் உட்பட உள்ளிட்ட 150 பேர் மீது பாகிஸ்தான் போலீசார் நேற்றிரவு வழக்குபதிவு செய்தனர். நயீம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இம்ரான் கான் உள்ளிட்டோர் மீது மசூதியை இழிவுபடுத்துதல், போக்கிரித்தனம் செய்தல் மற்றும் உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைசலாபாத் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: