×

பேயன்குழி, நெய்யூர் பகுதிகளில் பணிகள் தொடக்கம்; ரயில்வே பணிக்கு இரட்டைக்கரை சானல், இரணியல் சானல் உடைப்பு: 30 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும்

நாகர்கோவில்: ரயில்வே பணிக்காக இரட்டைக்கரை சானல், இரணியல் சானல் ஆகியன உடைக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில்பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வந்தது. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ. பாதையை இருவழி பாதையாக மாற்ற a900 கோடி கொண்ட திட்டத்துக்கு கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி - நாகர்கோவில் - இரணியல் பகுதி பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது பணிகள் நிறுத்தி வைக்கப்படும் நிலையும் உள்ளது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடத்தில் கன்னியாகுமரி - நாகர்கோவில் பிரிவில் மட்டும் பணிகள் ஓரளவு நடந்தது. குமரி மாவட்டத்தில் நடந்து வரும் இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கான பாசன வாய்க்கால்களில் இரட்டைக்கரை சானலில் பேயன்குழி பகுதியிலும்,

இரணியல் கால்வாயில் நெய்யூர் பகுதியிலும், பட்டணங்கால்வாயில் பள்ளியாடி பழையகடை ஆகிய இடங்களிலும் ரயில்வே துறையினர் சானல்களை உடைத்து பணி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பேயன்குழி, நெய்யூர் பகுதிகளில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலும், பள்ளியாடி பகுதியில் அடுத்த வருடமும் பணி செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் இப்பணிகள் காரணமாக சானல்களில் கடைவரம்பு பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்பதால் கன்னிப்பூ சாகுபடி பணிகள் செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுத்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

ஆனால் பணிகள் நடப்பு ஏப்ரல் மாதம் இறுதி வரை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு பணிகள் நடைபெறுமா என்ற சந்தேகமும், இரு பருவங்களில் விவசாயம் பாதிக்குமோ என்ற அச்சமும் விவசாயிகளிடம் இருந்தது வந்தது. இந்தநிலையில் திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்னர் நெய்யூர், ேபயன்குழி ஆகிய 2 இடங்களிலும் ரயில்வே துறையினர் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி சானல் பகுதிகளை உடைத்து அங்கு பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால் இந்த சானல் பாசன பகுதிகளில் ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்கப்பட்டாலும் தண்ணீர் விநியோகம் செய்யப்படாது.

நெற்பயிர்கள் மட்டுமன்றி வாழை, தென்னை உள்ளிட்ட இதர பயிர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. போதிய அளவில் மழை இல்லாத நிலை ஏற்பட்டால் பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளது. சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிகள் முடிய 4 மாத காலம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்து பொதுப்பணித்துறையும் இப்பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதியில் மேல் தொட்டி போன்ற அமைப்பில் தண்ணீர் செல்வதும், கீழ் ரயில் செல்லும் வகையிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே ரயில்வே துறை பணிகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பும் பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. கால்வாய்கள் உடைக்கப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை உள்ளிட்டோர் விரைந்து சென்று பணிகளை பார்வையிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘ஒரு மாதம் காலதாமதமாக ரயில்வே துறை பணிகளை தொடங்கியுள்ளதால் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய 2 பருவங்களிலும் பயிர் செய்ய முடியாத நிலையும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க முடியாத நிலையும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து சானல்களில் கடைமடைவரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தற்காலிகமாக சீரமைத்த பகுதிகளை உடைக்கும் ரயில்வே
குமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட நீர் நிலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இரட்டைக்கரை கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களில் நீர் புகுந்து சேதமடைந்தது. மேலும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், குளங்களில் நீர் அளவு மிகவும் குறைந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.  

இதனை கருத்தில் கொண்டு, மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் பேயன்குழி 3 ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக தண்ணீா் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் முடிந்து தண்ணீர் விநியோகமும் நடைபெற்றது. இந்தநிலையில் மீண்டும் அந்த பகுதிகள் உடைக்கப்பட்டதால் தண்ணீர் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்ேபாது ஒரு பகுதியில் உடைத்துள்ள ரயில்வே அடுத்து வரும் நாட்களில் தற்காலிக பணிகள் நடைபெற்ற இடத்தில் உள்ள ராட்சத குழாய்களையும் அகற்றக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.



Tags : Bayankuzhi ,Neyyur , Commencement of works in Bayankuzhi, Neyyur areas; Double bank channel for railway work, fateful channel breakage: 30 thousand acres will be affected by agriculture
× RELATED பேயன்குழி அருகே உடைப்பு இரட்டைக்கரை...