×

கன்னிவாடி பகுதியில் ஒற்றை யானை உலா: கும்கி யானையை கொண்டு விரட்ட கோரிக்கை

சின்னாளபட்டி: ஆடலூர், கன்னிவாடி, பன்றிமலை, தோனிமலை, டி.பண்ணைப்பட்டி, கோம்பைகரடு உள்ளிட்ட மேற்கு தொ டர்ச்சி மலைக்கிராமங்களில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். குறிப்பாக, கன்னிவாடி அருகே கோம்பை, ஆல்டா நகர், நாயோடை நீர்த்தேக்கம் பகுதியில் அடிக்கடி யானை வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகளும் கவலை அடைந்து வந்தனர்.

கடந்த 20 தினங்களுக்கு முன்பு வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை யானை மிதித்து கொன்றதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு செல்ல அச்சப்படுவதோடு குடியிருப்பை காலி செய்து கன்னிவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வந்து தங்கி வருகின்றனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் ஆவேசத்துடன் அலையும் ஒற்றை யானையை பிடிப்பதற்கும், விரட்டவும் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘முன்பு யானைகளால் பயிர்களுக்கு தான் சேதமடைந்து வந்தது. தற்போது யானைகளால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் யானை திரிவதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால் நாங்கள் மலையடிவார பகுதிகளில் தங்குவதை விட்டுவிட்டு ஊர்ப்பகுதிக்கு வந்துள்ளோம். கும்கி யானை கொண்டு வந்து விரட்டிய பின்பு நாங்கள் மீண்டும் மலைப்பகுதிக்கு செல்வோம்’’ என்றனர்.

Tags : Kanniwadi , Single elephant ride in Kanniwadi area: Request to drive away Kumki elephant
× RELATED கன்னிவாடி வாரச்சந்தையில் ரூ.10 கட்டணத்தில் மலிவு விலை உணவகம்