×

ஆசிரியர்கள்- மாணவர்கள் மோதலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து வேதனையடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறி சிறுவன் உடலுறவு கொண்டதால், சிறுமி கருவுற்றார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.

அந்த வழக்கில் திருவள்ளூர் சிறார் நீதி குழுமத்தில், சிறுவனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்றாண்டுகள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி 2021ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிறுவன் சார்பில் அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்தபோது மைனர் என்பது சிறார் நீதி குழுமத்தில்  நிரூபிக்கப்படவில்லை. சிறார் நீதி சட்டப்படி உரிய காலக்கெடுவில் முறையாக விசாரிக்காமல், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறி, சிறார் நீதி குழுமத்தின் தீர்ப்பை ரத்து செய்யப்படுகிறது.

சிறுவனை விட இரண்டு வயது அதிகமான சிறுமிக்கு அதிக பக்குவம் இருக்கும், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் தான் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காதல் என்பது இதிகாச காலங்களில் இருந்து சமூகத்தில் தொடர்ந்து வருகிறது. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, டிவி, மொபைல்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக பள்ளிகளில் ஆசிரியர்களிடமே மாணவர்கள் தவறாக நடந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை தொடர்ந்து குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே, பள்ளிக்கல்வித் துறையும், சமூக நலத் துறையும் இணைந்து ஆசிரியர்-மாணவர்கள் ேமாதல் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : ICORD ,School Education Department , Teachers- Students Conflict, Activity, School Education, Social Welfare, high court
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி