12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 22ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தின என 6 நாட்கள் நடத்தப்படும் என்றார்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (மே 1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்களால் காலை 10 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்று, தங்களது குறை தெரிவிக்கலாம். மேலும், கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்தினை கிருமி நாசினி தெளித்து சுத்தமாகவும், குடிநீர் வசதி ஏற்படுத்திடும் பணிகளை கிராம ஊராட்சி தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கிராம மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: