கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: உபயதாரர்கள் நன்கொடை மூலம் திருக்கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, வடபழனி வடபழனி ஆண்டவர் கோயிலில் கடந்த 23ம் தேதி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, சீரிய முறையில் தனிக் கவனத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க பல நன்கொடையாளர்கள் முன்வருவதால் இத்திட்டத்தை செயல்படுத்தும் திருக்கோயில்கள் இதற்கான நன்கொடை தொகையினை கணக்கிட்டு “நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்களும் பங்கு பெறலாம்” என்ற அறிவிப்பு பலகைகள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்கப்படும்.

பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமண நாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம். பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.

இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் திருக்கோயில்களுக்கு வருகிற பக்தர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும், இதனால் 10000 முதல் திருவிழா காலங்களில் 25 ஆயிரம் பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். அதற்கு தகுந்தாற்போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறைவனை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பாதைக்கு அருகில் கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில் முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை பிரசாதம் உண்டு மகிழ்கின்றனர்.

இத்திட்டம் இன்னும் பல திருக்கோயில்களில் விரிவுப்படுத்தப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். திருக்கோயில் பணியாளர்கள் தூய்மையான முறையில் கையுறைகள் அணிந்து பிரசாதம் வழங்குவர். பிரசாதம் வழங்கும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக இருத்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: