×

சிவகங்கை அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் 223 கிடாய் வெட்டி ‘கமகம’ விருந்து: 7 ஆயிரம் பேர் பங்கேற்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைகருப்பசாமி கோயில் உள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடைகருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பாத்திரங்கள், அரிவாள், மணி, கோயில் காளைகள், கருப்பு நிற வெள்ளாட்டு கிடாய்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டன.

முதலில் கிராமத்து ஆடு, அடுத்து பூசாரி ஆடு, பின்னர் நேர்த்திக்கடன் ஆடுகள் என மொத்தம் 223 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது. பொங்கல், சமைத்த இறைச்சி, ஆடுகளின் தலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதிகாலை 12 மணிக்கு பல்லியின் அசரிரீ கேட்டதும் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பலியிட்ட 223 ஆடுகளின் தலைகள் விழாவிற்கு வந்திருந்த ஒரு பிரிவினரிடம் வழங்கப்பட்டன. எஞ்சியுள்ள இறைச்சியை அங்கு மண்ணில் குழி தோண்டி புதைத்தனர். ஆடுகளின் தோல்களை தீயிட்டு எரித்தனர். நேற்று காலை வரை இவ்விழா நடந்தது. மடைக்கு இடப்பக்கம் பல்லி அசரீரி கூறினால் வறட்சி, நோய் பாதிப்பு ஏற்படும் எனவும், வலப்பக்கம் கூறினால் விவசாயம் செழிக்கும், மக்கள் நலமுடன் இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. நேற்று பல்லி அசரீரி வலப்பக்கமே கூறியது குறிப்பிடத்தக்கது.



Tags : Kidai ,Kamagama ,Sivagangai , Sivagangai, Men's Special Festival
× RELATED 10 ஆயிரம் பக்தர்களுக்கு 500 கிடாய், 300 கோழிகளை பலியிட்டு கமகம கறி விருந்து