கடலூர் அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல் பெற்றோர் சாலை மறியல்

கடலூர்: கடலூர் அருகே வெள்ளக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நேற்றுமுன்தினம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு தரப்பு மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இது குறித்து அறிந்த மற்றொரு தரப்பு மாணவர்கள், நேற்று காலை பள்ளி நடந்துகொண்டிருந்தபோது, மதில் சுவரை ஏறி குதித்து, உள்ளே சென்று மற்றொரு தரப்பு மாணவர்களை தாக்கியுள்ளனர். இதில் 8 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு வந்து, மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற மாணவர்களுடன் இணைந்து பள்ளிக்கூடத்தின் வெளியே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: