நாகை அருகே பரிதாபம் தேர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

நாகை: நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டாங்குடி உத்தரா பதீசுவரசாமி கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரம் வீதியுலா நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது. சப்பரம் தெற்கு வீதி வழியாக 10அடி தூரம் கடந்து வந்த நிலையில் சப்பரம் இடது பக்க முன் சக்கரத்தில் திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தீபன்ராஜ்(30) என்பவர் முட்டு கட்டை போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் சப்பரத்தின் முன்பக்க சக்கரம் அவரது இடுப்பின் மேல் ஏறி நசுக்கியது.

அருகில் இருந்தவர்கள் தீபன்ராஜை மீட்டு திருமருகல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று காலை அவர் இறந்தார். இது குறித்த திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த தீபன்ராஜ்க்கு புஷ்பவள்ளி (25) என்ற மனைவியும், ருத்ரா(3) என்ற குழந்தையும் உள்ளனர்.

 தகவல் அறிந்த அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அங்கு அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதை தொடர்ந்து புஷ்பவள்ளியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் திமுக சார்பில் ரூ.3 லட்சம் என ரூ.8 லட்சத்தை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

Related Stories: