×

நெல்லை அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் மோதலில் பிளஸ் 2 மாணவன் பலி: 3 பேர் கைது

நெல்லை: நெல்லை அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் காயமடைந்த பிளஸ்2 மாணவர் சிகிச்சை பலனின்றி நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்தார். இதுதொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம், அம்பை அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கையில் கயிறு கட்டுவது தொடர்பான பிரச்னையில், கடந்த 25ம் தேதி பிளஸ்2, பிளஸ்1 மாணவர்கள் கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.

இதில் பிளஸ் 2 மாணவரான முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வசூர்யா (17) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட நிலையில், அன்றிரவு வலி அதிகமானதால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவர் செல்வசூர்யா இறந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவில் திரண்டனர். மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க  வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை  செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தபின் உடலை பெற்று சென்று தகனம் செய்தனர். இது தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிந்து 3 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பதற்றம் காரணமாக போலீசாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Nellai , Nellai, students in government school, Plus 2 student killed, arrested
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!