×

பத்தாண்டுகளில் செய்ய வேண்டியதை ஓராண்டில் செய்து திமுக அரசு சாதனை: தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தேனி: பத்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு என தேனியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில் நேற்று தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 புதிய  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.114.21 கோடி மதிப்பிலான முடிவுற்ற  40 பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் ரூ.71.40 கோடி மதிப்பீட்டில் 10,427 பேருக்கு  பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:     

  நான் முதலமைச்சராக பொறுப்பேற்று, வரும் 7ம் தேதி ஓராண்டு நிறைவடைகிறது. கொரோனா தொற்று பரவலால் உடனடியாக பல மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. தேனி மாவட்ட அரசு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பிற்கு மகிழ்ச்சியடைகிறேன். அணை என்றால் மாபெரும் வைகை, மலை என்றால் மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு, அருவி என்றால் கும்பக்கரை, சுருளி, கலை என்றால் கண்ணகி கோயில் என வரலாற்றில் இடம் பெற்றுள்ள பெருமைக்குரியதாக தேனி மாவட்டம் இருக்கிறது.

தேனி மாவட்டத்தை கலைஞர்தான் உருவாக்கித் தந்து செயல்பட வைத்தார். பல்வேறு திட்டங்கள், எண்ண முடியாத சாதனைகளை திமுக ஆட்சிதான் செய்தது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். இவ்விழாவில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. இதுதான் நல்லாட்சியின் இலக்கணம், இதுதான் மக்களுக்கான அரசு. வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் அரசு. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி 7ம் தேதி நிறைவடையவே, இன்னும் ஒருவாரம் இருக்கிறது. பத்தாண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி தரப்பட்டுள்ளது. பதவியேற்றபோதே முதல் கையெழுத்திட்டு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையாக, பொங்கல் பரிசாக 21 வகையாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.  

கலைஞரிடம் ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர், மு.க.ஸ்டாலின் பற்றி ஒரு வரியில் கூறுங்கள் என்றார். அதற்கு கலைஞர்,  ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றார். அந்த உழைப்பை கற்றுத்தந்தவர் கலைஞர். எனக்கு மட்டுமல்ல. லட்சக்கணக்கானவர்களுக்கு உழைப்பை கற்றுத்தந்தவர். வழிகாட்டியாகவும் இருந்தார். கலைஞர்  பிறந்தநாள் ஜூன் 3ல் அரசு விழாவாக நடத்த சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு அனைத்து கட்சியினரும் வரவேற்று நிறைவேற்றினர். தந்தை கலைஞருக்கு, மகனாகிய எனக்கு அவரது பிறந்தநாளை அரசு விழாவென அறிவிக்கும் பாக்கியம் கிடைத்தது.

கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தபோது, அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர். ஆதரிக்காத கட்சி யாரென்று உங்களுக்கு தெரியும். இந்த தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.  

முன்னதாக கலெக்டர் முரளிதரன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

எம்ஜிஆரின் நாகரிகம் இவர்களிடம் இல்லை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இன்றைக்கு இருப்பவர்கள் கருணாநிதி என்று உச்சரிக்கின்றனர்.  ஒருமுறை காரில் பயணித்தபோது கருணாநிதி என்று பெயர் சொன்னதால் ஆத்திரப்பட்டு, ‘‘எனக்கே தலைவர் கலைஞர்தான். அவர் பெயரைச் சொல்லலாமா’’ எனக்கூறி, கருணாநிதி என்று சொன்னவரை காரிலிருந்து  இறக்கியவர்தான் எம்ஜிஆர். அப்படிப்பட்ட நாகரிகத்தை இன்றிருப்பவர்களிடம் எதிர்பார்த்தது தவறுதான். நல்லதோர் அரசியல் பண்பாட்டை உருவாக்குவோம்’’ என்றார்.

முதல்வர் அருகில் இருக்கை ஆப்சென்ட்டான அதிமுக எம்பி
தேனி அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமர்வோருக்கான இருக்கைகள்  ஒதுக்கப்பட்டன. இதில் தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு முதல்வருக்கு அருகில்  இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவில் எம்பி கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து இருக்கை எடுக்கப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் முரளீதரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேனி மாவட்ட அடையாளமாக திகழும் வைகை அணை படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை...
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசும்போது, ‘‘தேனி  மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்களுக்கான திட்டங்களை, நல்ல விஷயங்களை தேடித்தேடி  செய்கிறோம். அரசுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை பற்றி கவலைப்பட  தேவையில்லை. அவதூறு செய்யும் உள்நோக்கத்தில் இருப்பவர்களுக்கு பதில்  சொல்லவும் தேவையில்லை. நல்லது செய்யவே நேரம் போதவில்லை. கெட்டது  செய்பவர்களைப் பற்றி எங்கே சிந்திக்க?’’ என்றார்.

‘‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘சென்னையில் சட்டமன்றம், காஞ்சிபுரத்தில்  கிராமசபை கூட்டம், எதிர்பாராத விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பத்திற்கு   தஞ்சையில் ஆறுதல் கூறியதோடு, மீண்டும் சட்டமன்றம் சென்று, அதை முடித்து  விட்டு தேனி வந்துள்ளேன், மாலையில் திண்டுக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில்  பங்கேற்று இரவு சென்னை செல்ல வேண்டும். மறுநாள் மே தின விழா,  நெடுஞ்சாலைத்துறை விழா இருக்கிறது. ‘‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’’ என்ற  பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிக்கு ஏற்ப உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் தரும் உற்சாகம் என்னை உழைக்க தூண்டுகிறது’’ என்றார்.

ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் மகளிர்  மேற்கல்வி பயில மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்  6 லட்சம் மாணவியர் பயன்பட உள்ளனர். தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணும்  பட்டதாரியாக மாற வேண்டும் என்று இந்த அரசு போராடி வருகிறது. பெண்கள் கல்வி கற்க விதிக்கப்படும் தடைகளை தகர்த்தெறிவோம்’’ என்றார்.

Tags : CM ,K. Stalin , DMK Government Achievement: Chief Minister MK Stalin
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...