×

ஓய்வு பெற்றார் நரவானே ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று  பொறுப்பேற்றார். ராணுவ தலைமை தளபதியான மனோஜ் முகுந்த் நரவானேவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை தளபதியாக  லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே  பொறுப்பேற்றார். ஜெனரல் மனோஜ் பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் தலைமை தளபதி எம்.எம். நரவானே ஒப்படைத்தார். முன்னதாக, அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நரவானேவும், அவருடைய மனைவி வீணா நரவானேவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  ‘42 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றி இன்று ஓய்வு பெறும் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே உடனான அற்புதமான சந்திப்பு.

ராணுவ தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்புகள், நாட்டின் பாதுகாப்பு திறன்களையும் தயார்நிலையையும் வலுப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முப்படை தலைமை தளபதி பதவியா?
முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர், தமிழகத்தில்  கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அப்போது முதல், முப்படை தலைமை தளபதி பதவி காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் நரவானே  நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

* நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஜெனரல் மனோஜ் பாண்டே, நாக்பூரை சேர்ந்தவர்.
* இவர் கடந்த 1982ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தார்.
* ராணுவத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்தவர் பாண்டே. அப்படிப்பட்ட ஒருவர் ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்று இருப்பது இதுவே முதல்முறை.
* ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான், நிக்கோபார் பிரிவு தளபதியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Tags : Manoj Pandey ,Army , Retired Naravane, Commander-in-Chief of the Army, Manoj Pandey
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...