ஒரு பக்கம் பேச்சுவார்த்தை... மற்றொரு பக்கம் குண்டுமழை... பற்றி எரியும் உக்ரைன்: ஒரே இரவில் 389 ராணுவ தளங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

கீவ்: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே, மறுபக்கம் தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைனின் பல பகுதிகளில் குடியிருப்புகள், ராணுவ தளங்கள் பற்றி எரிகிறது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. போர் நிறுத்தம் தொடர்பாக அவ்வப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போனிலும், நேரிலும் பேசி போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது, மக்களை மனிதநேய பாதையில் பாதுகாப்பாக வெளியேற்றுவது, படைகளை வாபஸ் செய்வது போன்ற வாக்குறுதிகளை ரஷ்யா கொடுத்தது. ஆனால், ரஷ்யா தான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல், உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் கிழக்கு, தெற்கு உக்ரைனில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறல் காரணமாக மேற்கு நாடுகளின் ஆயுத உதவிகள் மூலம் ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தூரம் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய உக்ரைன், கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 300 கி.மீ தூரம் ரஷ்யாவுக்குள் புகுந்து 3 மாகாணங்கள் மீது டிரோன் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்யா, நேற்று முன்தினம் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உக்ரைனில் தலைநகர் கீவ்வில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசி கொண்டிருக்கும்போது கூட, கீவ் நகர குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்தது.

இந்த பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கார்கிவ்வில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 20 சதவீத குடியிருப்பு  கட்டிடங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளன. இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள 389 ராணுவ தளங்கள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த வாரம் ஒரே இரவில் 423 இடங்களை அது தாக்கியது. தற்போது, தெற்கு, கிழக்கு உக்ரைன் மற்றும் மரியுபோலை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இங்குள்ள சில நகரங்களில் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால், பல குடியிருப்புகள், ராணுவ தளங்கள்  தீப்பற்றி எரிகிறது. சைரன்கள் ஒலித்து கொண்டே இருந்தது. குறிப்பாக, மரியுபோல் தொழிற்சாலையில் சிக்கி உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. தங்களை காப்பாற்றும்படி இந்த மக்கள் கெஞ்சி வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் அவர்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது.

டான்பாஸ், மக்களை அழிக்க ரஷ்யா முயற்சி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘தொடர்ச்சியான மிருகத்தனமான குண்டுவீச்சுகள், உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதலால், டான்பாஸ் மற்றும் அங்கு வசிக்கும் அனைவரையும் அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது. இது, வாழ்க்கைக்கான போராட்டம். உக்ரைன் நிலைத்து நின்றால்தான் டான்பாஸ் நகரங்களும் நிலைத்திருக்கும்,’ என தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்கு நேட்டோ தடை

* உக்ரைனின் வலிமையான பதிலடி காரணமாக ரஷ்யாவின் தாக்குதல்  திட்டமிடப்பட்டதை விட மிகவும் மெதுவாக செல்கிறது என்று மூத்த அமெரிக்க  பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

* கீவ் அருகே உள்ள பகுதிகளில் ரஷ்ய படைகள் அட்டூழியங்கள் செய்ததாக உக்ரைன் கூறியுள்ள குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

* உக்ரைன் படைகள் கார்கிவ் அருகே உள்ள ருஸ்கா லோசோவா கிராமத்தை மீண்டும் கைப்பற்றியதாகவும், நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

* ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ‘உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் தீர்வை எட்டுவதில், நேட்டோ நாடுகள் தடையாக உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

முதல் நாளிேலயே ஜெலன்ஸ்கியை கொல்ல முயற்சி

உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் அமெரிக்க இதழுக்கு அளித்த பேட்டியில், ‘பிப்ரவரி 24 அதிகாலை உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்த நேரத்தில், அதிபர் ஜெலனஸ்கியையும், அவரது குடும்பத்தினரையும் கொல்ல அல்லது உயிருடன் பிடிப்பதற்காக ரஷ்ய படைகளின் சிறப்பு குழுக்கள் கீவ்வுக்குள் பாராசூட் மூலம் நுழைந்ததனர்.

அன்று இரவு நடந்த காட்சிகள், நாங்கள் திரைப்படத்தில் மட்டுமே பார்த்துள்ளோம். அப்போது, ஜெலன்ஸ்கி, அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்கா, அவருடைய 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து போராடி முதலில் ஜெலன்ஸ்கியை மீட்டோம். பின்னர், அவரது குடும்பத்தினரை மீட்டோம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: