×

உள்கட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்: ஒற்றை தலைமை குறித்தும் முக்கிய முடிவு எடுக்க திட்டம்

சென்னை: உள்கட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை கொண்டுவருவது உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதிமுக கட்சியில் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு முதல் இதுவரை அதிமுக பொதுக்குழுகூட்டம் நடத்தவில்லை. அதேபோன்று, 5 ஆண்டுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தது. தேர்தல் தோல்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒற்றுமையாக இல்லாமல் தனி அணியாக செயல்பட்டதே காரணம் என்றும், கூட்டணி குறித்து எடப்பாடி தன்னிச்சையாக முடிவு எடுத்ததால், தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது என்றும் அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், உள்கட்சி மோதல் காரணமாக பொதுக்குழு கூட்டப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற்றது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, வார்டு அளவில் வட்ட செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுக உட்கட்சி தேர்தல் முடிவுகளை டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவை கூட்ட கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மே 10ம் தேதிக்கு மேல் மே மாதம் 3வது வாரம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அதிமுக கட்சி தலைமை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தற்போது நடைபெற்று தேர்வாகியுள்ள மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும்.

மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியை வழிநடத்தி செல்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவை ஒற்றை தலைமையே வழிநடத்த வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் அதிமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று கடந்த ஏப்ரல் 12ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags : Election Commission , Intra-Party Election, Election Commission, AIADMK General Committee
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!