பரம்பிக்குளம், ஆழியார் நீர்தேக்கத்தை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்: திண்டுக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.206.54 கோடி மதிப்பிலான 285 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 54,230 பயனாளிகளுக்கு ரூ.364.95 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

ரூ.5 கோடி செலவில் திண்டுக்கல் முதல் பழனி வரை பாத யாத்திரை செல்பவர்களுக்காக தனி பாதை அமைக்கப்படும். திண்டுக்கல்லில் அணைகள், மேம்பாலங்கள், கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி தான். 5 முறை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது திண்டுக்கல்லுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.121 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ.1080 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிகள் ஓராண்டில் நடைபெறுகின்றன.

ரூ.930 கோடியில் மாபெரும் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், நெய்காரபட்டி உள்ளிட்ட கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். பரம்பிக்குளம், ஆழியார் நீர்தேக்கத்தை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தான் அறிவிக்கும் அனைத்து திட்ட பணிகளையும் முதலமைச்சர் அறையில் இருந்து கண்காணிப்பேன்.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக அளவில் முன்னிலை பெற ஊக்கத்துடன் பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற அனைவரும் துணை நிற்க வேண்டும். மாநிலத்தின் அரசியல், சட்டம், நிதி ஆகியவற்றின் உரிமைகளை முடக்க சிலர் நினைக்கின்றனர், அது ஒருபோதும் நடக்காது என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.

மாநிலங்களை முடக்குவதாக நினைத்து, ஒருசிலர் மக்களை முடக்கி வருகின்றனர். உங்களின் ஒருவனாக இருந்து தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க தினமும் உழைத்து வருகிறேன் என்றும் கூறினார். இந்த அரசு மக்களுக்கான திராவிட மாடல் அரசு என்றும் குறிப்பிட்டார். தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: