திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குழந்தையுடன் பெற்றோர் செல்ல சிறப்பு நுழைவு தரிசன திட்டம்: 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமலானது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையுடன் பெற்றோர்கள் குறுகிய தொலைவில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் விதமாக சிறப்பு நுழைவு தரிசனத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள சுபதம் நுழைவாயில் வழியாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுடன் பெற்றோர் இலவசமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த திட்டம் நேற்று அமலானது. இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழை கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு தரிசனம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வருமாறு: சுபதம் நுழைவு வாயிலில் சரிபார்ப்பின்போது குழந்தையின் வயதை உறுதிப்படுத்த பெற்றோர்கள் பிறப்புச்சான்று அல்லது ஏதேனும் அரசாங்க அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். இந்த தரிசனத்திற்கு குழந்தையின் பாதுகாவலர் அல்லது உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைகளுடன் பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

குழந்தையுடன் 12 வயதிற்குட்பட்ட சொந்த சகோதரர் அல்லது சகோதரிகள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தரிசனத்திற்கு டிக்கெட் இல்லை. பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இலவசம். சுபதம் நுழைவு வாயில் வைகுண்டம் வரிசை வளாகத்திலிருந்து 100 முதல் 200 அடி தொலைவில் உள்ளது. இங்கு குழந்தைகள் வரிசையில் தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெற்றோர்கள் புடவை, துப்பட்டாவுடன் பஞ்சாபி ஆடை, ஆண்கள் வேட்டி சட்டை, குர்தா - பைஜாமா ஆகிய ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: