×

தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக செல்போன் எடுத்து வருதல் கூடாது-புதுகை ஆய்வு கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் எச்சரிக்கை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநர் பொன்னையா தலைமையில் மேல்நிலை, முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளுக்கான ஆய்வு அலுவலர்கள் மற்றும் அனைத்துநிலை தேர்வுப் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை வகித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் பொன்னையா பேசியதாவது:

இருபது மாணவர்களுக்கு ஒருவர் அறைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட வேண்டும். அறைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை போதிக்கும் ஆசிரியர்களாக இருக்க கூடாது. தேர்வு நடைபெறும் நாட்களை உள்ளூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்து உரிய காவல்துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள்கள், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்குப் போதிய இரும்பு அலமாரிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வறைகள் எவ்விதப் பாதிப்புமின்றி தேர்வெழுதக் கூடிய தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பாக மற்றும் தூய்மையாக இருக்க வேண்டும். ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் உடனே சரிசெய்திட வேண்டும்.

தேர்வறைகளில் இருக்கைவசதி,மின்வசதி மற்றும் தேர்வு அறையின் சுத்தம் போன்றவை சரியாக உள்ளதையும்,குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறைகள் வசதி ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்.தேர்வறைகளின் சுவர்,கரும்பலகை மற்றும் இருக்கைகளில் எவ்விதமான பாட சம்பந்தப்பட்ட விவரங்களும் இல்லாதபடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளியைச் சார்ந்த எந்த ஒரு பணியாளரும் ( பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட) தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருக்க கூடாது. எக்காரணங்களை கொண்டும் அதே பள்ளியின் பணியாளர்களை அலுவலகப் பணிக்கு உட்படுத்தக் கூடாது.

மேலும் காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மைய இணைப்பு பள்ளிகளின் பணியாளர்களும் ஆசிரியர்களும் கூட தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. விடைத்தாள்கள் உரிய வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் வரை யாரையும் தேர்வு மைய வளாகத்திற்குள் வர அனுமதிக்க கூடாது.தேர்வு மைய வளாகம் செல்போன்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாகும்.
எனவே பள்ளித் தேர்வர்கள் தனித்தேர்வர்கள் யாரும் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. .தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேர்வினை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்வுப் பணி குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் .ஆசிரியர்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டு இருக்கும் மாணவனைப் போல் இருக்க வேண்டும்.ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணியை மனச்சாட்சிக்கு உட்பட்டு சரியாக செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு மிக முக்கியமானது நேரம் தவறாமை ஆகும் என்றார்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி்.சத்தியமூர்த்தி தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வு அலுவலரின் பொறுப்புகள், வினாத்தாள் கட்டுக் காப்பாளரின் கடமைகள், வழித்தட அலுவலரின் பொறுப்புகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, மணிமொழி, ராஜா ராமன், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் பிச்சைமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்( மளல்நிலை) ராஜீ ( உயர்நிலை),பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து ,இளையராஜா மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடர்பு அலுவலர்கள், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காளிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Associate Director of School Education ,Innovation Review Meeting , Pudukkottai: Pudukkottai Pragathambal Government High School campus in the examination hall arena Associate Director of School Education
× RELATED பள்ளிகளில் கட்டிட உறுதித் தன்மை...