×

பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் ஆட்டோ டிரைவர்கள் 6பேர் தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் : பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆட்ேடாக்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆட்டோ ஓட்டி வரும் பெரியபுதூரை சேர்ந்த அசோக் (38), சேலம் 4 ரோட்டை சேர்ந்த பிரபு (34), சாமிநாதபுரத்தை சேர்ந்த நாராயணன் (52), அஸ்தம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (52), சுவர்ணபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (42) மற்றும் கோரிமேட்டை சேர்ந்த இளங்கோவன் (34) ஆகிய 6 பேரும் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். புது பஸ் ஸ்டாண்ட் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை டிப்போ ஸ்டேண்டை சேர்ந்த ஒருவரும், சுவர்ணபுரி பகுதி ஆட்டோ ஸ்டேண்டைச் சேர்ந்த ஒருவரும், புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டக்கூடாது என மிரட்டுகின்றனர்.

மேலும், அப்பகுதியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என தொந்தரவு செய்கின்றனர். ஒரு ஆட்டோவுக்கு ₹10,000 வீதம் கொடுக்காவிட்டால், அங்கு ஆட்டோ ஓட்ட முடியாது என மிரட்டுகின்றனர். இதுகுறித்து, பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். ஒரே நேரத்தில், 6 ஆட்டோ டிரைவர்கள் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Salem , Salem: A riot broke out at the Salem Collector's Office after six auto drivers tried to set fire to a house, demanding money and intimidation. Salem
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...