கோவை ரயில் நிலைய பெயர் பலகையில் கோயம்பத்தூர் என குறிப்பிட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

கோவை : கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள நுழைவு வாயிலில் கோயம்புத்தூர் என்பதற்கு பதிலாக `கோயம்பத்தூர்’ ரயில் நிலையம் என குறிப்பிட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவை ரயில் நிலையம் 6 நடைமேடைகள், 20 தண்டவாளங்கள் கொண்ட தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், டுரன்டோ, கோவை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மங்களூர், ராஜ்கோட், நிஜாமுதீன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ரயில் நிலையத்தின் முன்பு புறம் உள்ள நுழைவு வாயிலில் கோயம்புத்தூர் ரயில்நிலையம் என எழுதப்பட்டுள்ளது. ஆனால், பின் புறத்தில் உள்ள நுழைவு வாயிலில் `கோயம்பத்தூர்’ என தவறாக எழுதப்பட்டுள்ளது.

இது ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒன்றிய அரசு தனது திட்டங்களில் இந்திக்கு முக்கியத்துவம் அளித்தும், பிற மொழிகளை புறக்கணிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ரயில்நிலையத்தில், தமிழில் எழுத்து பிழையுடன் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை தமிழ் ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,``கோயம்புத்தூர் ரயில்நிலையம் என்பதற்கு பதிலாக கோயம்பத்தூர் ரயில் நிலையம் என பின் பக்க நுழைவு வாயிலில் எழுத்து பிழையுடன் பெயர் பலகை இருப்பதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. விரைவில், இது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: