×

டவுன் பஸ் கண்டக்டருடன் கல்லூரி மாணவர்கள் தகராறு-நடுரோட்டில் பஸ் நிறுத்தம்

நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில், அரசு டவுன் பஸ் சென்றது. அதில் அரசு கல்லூரி மாணவர்கள் இருவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட கண்டக்டர் ராஜாவிடம், அவர்கள் தகராறு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த கண்டக்டர் ராஜா, நாமக்கல் உழவர் சந்தை அருகே பஸ்சை திடீரென நிறுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, எஸ்ஐ சங்கீதா மற்றும் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கண்டக்டர் பயணிகளை மரியாதை குறைவாக நடத்துவதாக கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். கண்டக்டர் ராஜா, இரு மாணவர்களும் பஸ்சில் தினமும் தகராறு செய்து வருவதாக தெரிவித்தார். பஸ்சில் வந்த மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அடுத்த கோக்கலையை சேர்ந்த கோகுல்(21), முகேஷ்பாபு(19) ஆகியோர், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். தவிர இந்திய மாணவர் சங்கத்தில் பொறுப்பு வகித்தும் வருகிறார்கள்.

இதையடுத்து போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பஸ்சில் இருந்த பயணிகளை, வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பஸ்சில் நடந்த சம்பவம் குறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், நாமக்கல் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இதற்கிடையில் பஸ்சில் நடந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த கண்டக்டர் ராஜாவுக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : Nadurode , Namakkal: The Government Town bus left Namakkal for Tiruchengode at 5 pm yesterday. Government College
× RELATED நடுரோட்டில் ஓடஓட விரட்டி ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 10 பேருக்கு வலை