4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை:  நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மிகுந்த இடர்பாடுகள் உள்ளதாலும், இந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், உறுப்பினர், குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் குடிதண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என கேட்டார். அதேபோன்று, குப்பை கொட்டப்படும் இடத்தை சீர் செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இப்போது, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டிருக்கிறார். ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள நகராட்சிகளோடு, செங்கல்பட்டு நகராட்சியையும் இணைத்து, செங்கல்பட்டு நகராட்சியில் முழுமையாக 100 சதவீதம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

Related Stories: