மொபட்டில் இருந்த 11 சவரன் அபேஸ்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (50). பாமக பிரமுகர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்திரா. நேற்று மதியம் 12 மணியளவில் இந்திரா, தனது வீட்டில் இருந்த 11 சவரன் நகைகளை எடுத்து கொண்டு, திருப்போரூர் ரவுண்டானா அருகே உள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்க மொபட்டில் சென்றார். அங்கு நகை மதிப்பீட்டாளர் இல்லாததால், திரும்பி வந்து குளக்கரை அருகே பெட்ரோல் நிலையத்தில், மொபட்டில் பெட்ரோல் நிரப்பி விட்டு, பின்னர் ரவுண்டானா அருகே காய்கறி கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் அவர், வீட்டுக்கு சென்று, பைக் பெட்டியில் இருந்து நகைகள் மற்றும் செல்போன் வைத்த பையை எடுக்க திறந்தபோது, அதை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கணவர் பரந்தாமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் பரந்தாமன், திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வங்கியில் இருந்து பெட்ரோல் நிலையம் சென்று, அங்கிருந்து காய்கறி கடைக்கு இந்திரா சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், மொபட்டில் இருந்து பையை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: