×

நமக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழக அரசின் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது: பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழர்களும் இதில் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால், பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக தமிழகம் நோக்கி வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது, இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களை காப்பாற்ற ஒன்றிய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமாக இருந்தபோது, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடித்தார்கள். கச்சத்தீவில் தங்களது மீன்பிடி வலையை உலர்த்துவதற்கு, ஓய்வு எடுப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைந்து நடத்தி, கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இந்த அரசு தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழக அரசின் சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு வழங்குவதற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதியை வழங்க வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த தனி தீர்மானத்தை அதிமுக சார்பில் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Addapadi Palanisamy ,Government of Tamil Nadu ,Kachadi , AIADMK supports, Kachchadi, Edappadi Palanisamy's
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...