கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.நீலகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவலின்படி முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோவை அவிநாசி  ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை  போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், அதிமுக நிர்வாகி அனுபவ் ரவி, நீலகிரி எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் மர வேலை செய்து கொடுத்த பர்னிச்சர் கடை உரிமையாளர் அதிமுக நிர்வாகி சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். பூங்குன்றன் நேற்று காலை  10 மணியளவில் கோவை பிஆர்எஸ் மைதானத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஏற்கனவே இவர் ஆஜரான நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். அவருக்கு போயஸ் கார்டன் மற்றும் அதிமுக வட்டாரத்தில் நட்பு உள்ளது. ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க அனுமதிக்க வேண்டும்? யாரெல்லாம் அனுமதிக்கக்கூடாது? அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அவரது பார்வைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை பூங்குன்றன் மேற்கொண்டார். தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம், மற்றும் காணாமல் போன ஆவணங்கள் குறித்து அவருக்கு தெரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையின்போது, கொடநாடு பங்களாவில் உட்புற வேலைப்பாடுகள் செய்த சஜீவன் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சொன்ன தகவலின்பேரில் மேலும் சில அதிமுக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: