×

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் நள்ளிரவில் கைது: சஸ்பெண்ட் செய்து சிஇஓ உத்தரவு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை, நள்ளிரவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ்(49). இவர் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெம்பகரை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 102 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.  நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த பணிமாறுதல் கவுன்சிலிங்குக்கு சென்றிருந்தனர். இதனால், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தார். இதனிடையே பள்ளியில் அவர் 7ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள், தலைமையாசிரியர் லாரன்சை அடித்து, உதைத்து கடுமையாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிய தலைமை ஆசிரியர் லாரன்ஸ், தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல், அவரது கார் கண்ணாடியை உடைத்து, கார் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு ஆளான அவர், அவர்களிடமிருந்து தப்பித்து, தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று,  விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், அஞ்செட்டி போலீசார் கெம்பகரை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பாதிப்புக்குள்ளான மாணவியின் தாய், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்த தலைமை ஆசிரியர் லாரன்சை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தலைமை ஆசிரியர் லாரன்சை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.





Tags : Headmaster ,Dhenkanikottai ,CEO , Near Dhenkanikottai Who made a mockery of the school student Headmaster arrested at midnight: CEO orders suspension
× RELATED கோயிலில் வசித்த ஆதரவற்றவர் மீட்பு