மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் மிரட்டும் ‘பாகுபலி’ காட்டுயானை: வனத்துறையினர் தீவிர ஆலோசனை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று வாழை, தென்னை பயிரிடப்பட்ட விளை நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்ட பிரமாண்ட தோற்றமுடைந்த இந்த ஆண் யானை மிக கம்பீரமாக இருக்கும். இதனை மேட்டுப்பாளையம் மலைக்கிராம மக்கள் ‘‘பாகுபலி’’ என்று அழைத்தனர். வாழைத்தோட்டத்திற்குள் இந்த யானை புகுந்துவிட்டால் புயல் தாக்கிய பூமிபோல் விளைநிலம் சேதமாகி பரிதாபமாக காட்சி அளிக்கும். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை ‘‘பாகுபலி’’ விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் ‘‘பாகுபலி’’ யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் யானையை பிடிக்க 3 கும்கிகளுடன் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் யானை போக்குகாட்டியவாறு அங்குமிங்கும் ஓடி மறைந்தது. இதனால் வனத்துறையினர் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ‘‘பாகுபலி’’ யானை தானாகவே வனத்துக்குள் சென்றது. இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.வனத்தில் கடும் கோடை நிலவுதால் தற்போது வனத்தைவிட்டு ‘‘பாகுபலி’’ யானை மீண்டும் வெளியே வந்துள்ளது. வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த ‘‘பாகுபலி’’ மேட்டுப்பாளையம்-கல்லார் சாலையை கடந்துள்ளது. இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர்.  மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையை கடந்த யானை சமயபுரம் பகுதிக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகள் நிறைந்த சாலைகளில் உலவியது. இதனை கண்ட மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் யானை இதுவரை மனிதர்களை தாக்கவில்லை. எனினும் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தலாமா? என்று வனத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: