×

பெரம்பலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியை வெட்டிய கணவர்: தடுக்க முயற்சித்த போலீஸ்காரர் காயம்

பெரம்பலூர்: விவாகரத்து வழக்கில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மனைவியை, கணவர் கத்தியால் சரமாரி வெட்டினார். தடுக்க வந்த போலீஸ்காரர் காயம் அடைந்தார்.பெரம்பலூர் மாவட்டம, பூலாம்பாடியை சேர்ந்தவர் காமராஜ் (47). இவரது மனைவி சுதா (40). இருவருக்கும் திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. இதையடுத்து சுதா, நகைகள் மற்றும் பணத்துடன் கடந்த 5 வருடத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா, பெரம்பலூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு கடந்த 2020ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில்,நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக இருவருக்கும் வாய்தா போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக சுதா வருவதையறிந்த காமராஜ், 10 மணிக்கு முன்னதாகவே நீதிமன்றத்திற்கு வந்து பைக் ஸ்டாண்ட் பகுதியில்  காத்திருந்தார்.

அப்போது காலை 10.30 மணியளவில் பஸ்சில் இருந்து இறங்கிய சுதா, நீதிமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே நடந்து சென்றார். இதில் யாரும் எதிர்பாராத நிலையில் பைக் ஸ்டாண்டில் இருந்து திடீரென வேமாக ஓடி வந்த காமராஜ், தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் இடதுகாலை சரமாரி வெட்டியதோடு, கழுத்து பகுதியிலும் வெட்டினார். இதில் சுதாரித்துக்கொண்ட சுதா, தலையை குனிந்ததால் அந்த கத்தி சுதாவின் கன்னத்திலும், வாயிலும் கீறியது. இதில் அவர் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார்.இதனை பார்த்த நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் அழகேசன் (29) ஓடிச்சென்று காமராஜ் கையில் வைத்திருந்த கத்தியை பறிக்கும் போது, அழகேசனின் வலது கை மணிக்கட்டு அருகே கத்தி கீறியதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இருந்தாலும் ரத்த காயத்துடன் காமராஜை பிடித்து வைத்திருந்தார். அதே போல் காமராஜ் இடது கையிலும் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  காயம் அடைந்த இருவரையும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Perambalur , Sensation in Perambalur court Who appeared in the divorce case Husband hacking wife: Policeman injured while trying to stop
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...