×

உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: காவலர் குடியிருப்பையும் பார்வையிட்டார்

உசிலம்பட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்திலும், ஆண்டிபட்டியில் காவலர் குடியிருப்பையும் ஆய்வு செய்தார்.  தேனி, திண்டுக்கல்லில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக நேற்று மாலை விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். விமானநிலையத்திலிருந்து காரில் அவர் தேனிக்கு புறப்பட்டுச் சென்றார். வழியில் உசிலம்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே காரை நிறுத்துமாறு கூறியவர், தீயணைப்பு நிலையத்துக்குள் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அப்போது அலுவலக பணியில் முத்தழகு என்ற தீயணைப்பு வீரர் இருந்தார். அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், தீயணைப்பு நிலையத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் பணி புரிவோருக்கு ஏதும் கோரிக்கைகள் உண்டா? என கேட்டறிந்தார். அப்போது முதல்வருடன் வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தீயணைப்புத்துறை அலுவலக கட்டிடத்தை தான் திறந்து வைத்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த கட்டிடத்திற்கான கல்வெட்டின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பு அருகே காரை நிறுத்த செய்தார். தொடர்ந்து அவர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார். முதல்வர் வீட்டிற்குள் வந்ததை கண்ட குடியிருப்புவாசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர், முதல்வரை தங்கள் வீட்டில் சாப்பிட்டு செல்லுமாறு கூறினார்.

அதற்கு, ‘‘வீட்டில் இரவு என்ன சாப்பாடு’’ என்று முதல்வர் கேட்க, தோசை என்று அந்த பெண் கூறினார். ‘‘எனக்கு தண்ணீர் மட்டும் கொடுங்கள்’’ என்று கூறி, தண்ணீர் குடித்து விட்டு வெளியே சென்றார். இந்த போலீஸ் குடியிருப்பு கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அந்த குடியிருப்பு நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் வாகனத்தில் ஏறி, அங்கிருந்து அவர் வைகை அணைக்கு புறப்பட்டு சென்றார்.

‘மக்களை தேடி வந்து குறை கேட்கும் முதல்வர்’
முதல்வரிடம் பேசிய விஜயராணி கூறும்போது, ‘‘முதல்வர் திடீரென்று எங்கள் குடியிருப்பு பகுதிக்குள், வீட்டிற்குள்ளேயே நுழைந்து வந்து சந்தித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களை நலம் விசாரித்தார். குடியிருப்புகள் எப்படி உள்ளது? உங்களுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா? என்று ஒரு சகோதரராக விசாரித்தார். அடுத்தடுத்த வீடுகளுக்கும் அவர் சென்று அங்கிருந்தவர்களிடம் பாசத்தோடு விசாரித்தது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் குறைகளை தீர்க்கக் கோரி முதலமைச்சரை தேடிப்போன காலம் போய், அவரே மக்களிடம் நேரடியாக வந்து குறைகளை கேட்டறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

நலம் விசாரித்த முதல்வர் தீயணைப்பு வீரர் நெகிழ்ச்சி
உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர் முத்தழகு கூறும்போது, ‘‘திடீரென முதல்வர் மற்றும் பெரிய அதிகாரிகள் வந்ததும் பதற்றமடைந்து விட்டேன். என் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து நின்று, அனைவரும் நன்றாக இருக்கிறார்களா? எல்லா வசதிகளும் இருக்கிறதா? அரசின் உதவிகள் எல்லாமும் கிடைக்கிறதா? குறை, கோரிக்கைகள் உண்டா? என்று கேட்டதும் ஒரு மிகப்பெரிய ஆனந்தத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்ந்து விட்டேன்’’ என்றார்.



Tags : Chief Minister ,MK Stalin ,Usilampatti fire station , At Usilampatti Fire Station Chief Minister MK Stalin's surprise inspection: The police also visited the residence
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...