
திருவனந்தபுரம்: கடந்த சில வருடங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும், கேரளா சார்பில் நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோசும் இடம்பெற்று உள்ளனர்.இந்நிலையில், இந்த குழுவில் இருமாநில தொழில்நுட்ப நிபுணர்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதன்படி, இந்த மேற்பார்வைக் குழுவில் தமிழகம் சார்பில் காவேரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியமும், கேரளா சார்பில் நீர்ப்பாசனத் துறை, நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம், தலைவருடன் சேர்த்து இக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்க்கப்பட்ட பிறகு, இந்த குழுவின் முதல் கூட்டத்தை அடுத்த மாதம் 9ம் தேதி தேக்கடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.