×

ஐநா பொதுச் செயலாளர் உக்ரைன் சென்ற நிலையில் கடும் தாக்குதல் யாரா இருந்தா எனக்கென்ன...

* கீவ் மீது ஏவுகணைகள் வீச்சு, குண்டுமழை
* ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம்

மாஸ்கோ: ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு நேற்று சென்ற நிலையில், அந்த நகரத்தின் மீது ரஷ்ய ராணுவம் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும், தனது நாட்டு விமானப்படை தளங்களில் இருந்தும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.நேட்டோ அமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யாவின் பிரமாண்ட ராணுவ பலத்தின் காரணமாக, இந்த போர் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்றுதான் ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை தொடர்ந்து ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் வாரி வழங்கி வருவதால், ரஷ்ய படைகளுக்கு  உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது. இதனால், எளிதாக வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்யா, 2 மாதங்களையும் தாண்டி போரை நடத்தி கொண்டிருக்கிறது.

உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள், ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து விட்டன. பொதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. மரியுபோல், கார்கிவ் உட்பட பல நகரங்களில் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் உக்ரைனக்கு சென்று வருகின்றனர். போரை நிறுத்தும்படி ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு  சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். பின்னர், போரினால் நாசமாகி உள்ள பகுதிகளை அவருடன் சென்று பார்வையிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பின் பொதுச் செயலாளர் உக்ரைன் சென்றுள்ள நிலையில், வழக்கத்தை விட நேற்று மிகவும் உக்கிரமான தாக்குதலை தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியது.  

தனது நாட்டின் விமானப்படை தளத்தில் இருந்து நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வீசி, கீவ் நகர குடியிருப்புகளை தகர்த்தது. அதில், பல  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இங்குள்ள உக்ரைன் ராணுவத்தின் ஆயுத தொழிற்சாலையும் தகர்க்கப்பட்டது. அதேபோல், விமானங்கள் மூலம் கீவ் நகரின் புறநகர்களில் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் டீசல் ரக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து, ‘காலிபர்’ ரக ஏவுகணைகளும் வீசப்பட்டன. குட்டரெசின் பயணத்தின்போது தலைநகரை இந்தளவுக்கு ரஷ்யா குறி வைத்து தாக்கியதற்கு, ஐநா அமைப்பில் அதற்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களே காரணம் என கருதப்படுகிறது. இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக குட்டரெஸ் செயல்படுவதாக ரஷ்யா சந்தேகிக்கிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.அதே நேரம், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாசை கைப்பற்றுவதற்கான தீவிர தாக்குதலையும் வழக்கம் போல் நேற்றும் ரஷ்ய படைகள் தொடர்ந்தன. இங்கு பீரங்கிகள் மூலமாக சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

எண்ணெய்க்கு 2 தவணை இந்தியாவுக்கு ரஷ்யா சலுகை
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த நாட்டிடம் இருந்து யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதையும் மீறி ரஷ்யாவிடம் இருந்த கடந்த மாதம் மிகவும் குறைந்த விலைக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது. இதனால், அமெரிக்காவும் கூட கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில், தன்னிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கான பணத்தை, 2 தவணையாக வழங்கலாம் என்ற சலுகையை இந்தியாவுக்கு ரஷ்யா நேற்று வழங்கியது.

பிரிட்டனை சேர்ந்த 2 பேரை பிடித்து சென்றது ரஷ்ய படை
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேரடியாக அங்கு சென்று உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த 2 தன்னார்வலர்களை ரஷ்ய படைகள் பிணைக்கைதியாக பிடித்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : UN ,Secretary-General ,Ukraine , UN Secretary General visits Ukraine For me from someone ...
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து