மின் உற்பத்திக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு செல்வதற்காக 42 பயணிகள் ரயில் ரத்து: மாநிலங்கள் கொடுத்த நெருக்கடியால் ஒன்றிய அரசு அவசர நடவடிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களின் மின் பற்றாக்குறை காரணமாக,  கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மின் உற்பத்தியை  அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு  ரயில்கள் செல்வதற்காக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில் சேவை காலவரையின்றி  ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு  முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியில்  இருந்து பெறப்படுகிறது. தற்போது வரலாறு காணாத வெயில் நிலவுவதால், மின் தேவை  அதிகரித்துள்ளது. அதே சமயம், சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை  கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத  நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை மட்டுமே அனல் மின்  நிலையங்கள் நம்பி உள்ளன.

இதன் காரணமாக, நாட்டில் உள்ள 173 அனல் மின்  நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு கணிசமாக  குறைந்துள்ளது. வெறும் ஓரிரு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே  இருப்பதால், மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சமாளிக்க மின்வெட்டு  தவிர்க்க முடியாததாகி உள்ளது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்  பல நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே,  மின் உற்பத்தியை அதிகரிக்கும்படியும், போதுமான அளவுக்கு நிலக்கரியை விநியோகிக்கும்படியும் ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன. இதற்கு பணிந்து, நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க ஒன்றிய அரசு முன்னுரிமை தருவதாக சமீபத்தில்  அறிவித்தது. அதன்படி, மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும்  சரக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 5  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு 400 பெட்டிகள் மூலம் நிலக்கரி  சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிலக்கரி கொண்டு செல்லும்  சரக்கு ரயில்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக 42 பயணிகள் ரயில் சேவை  காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தற்போது  அறிவித்துள்ளது. மழைக்காலம் வரையிலும் அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலும்  இந்த நிலை தொடரும் என ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய  ரயில்வே செயல் இயக்குனர் கவுரவ் கிருஷ்ணா பன்சால் அளித்த பேட்டியில்,  ‘‘நிலக்கரியை கொண்டு செல்வதற்காக போர்க்கால சூழலில் நடவடிக்கைகளை  எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் ரத்து அறிவிப்பு தற்காலிகமானது. நிலைமை  சீரடைந்ததும் மீண்டும் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்,’’ என்றார். விரைவு  மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இது குறித்து ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள  விளக்கத்தில், ‘ரத்து செய்யப்பட்ட ரயில்களை இயக்கக் கோரி பல பகுதிகளில்  மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. நீண்ட  தூர இடங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள் சென்று சேர  கிட்டத்தட்ட 2 - 3 நாட்கள் ஆகின்றன. எனவே, மின் பற்றாக்குறையை சமாளிக்க  பயணிகள் ரயில்கள் ரத்து அவசியமான ஒன்றாக உள்ளது,’ என தெரிவித்துள்ளது.

தேசிய நெருக்கடி நிலை

ராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெலாட் தனது டிவிட்டரில், ‘இது தேசிய நெருக்கடி. இதில் அனைவரும்  ஒற்றுமையுடன் இருந்து நிலைமையை சீராக்க உதவ வேண்டும். போதுமான நிலக்கரி  சப்ளை செய்யப்படாததால், மின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில்,  நிறுவனங்களில் தேவையில்லாத மின்சாதனங்களை நிறுத்தி வைத்து மின்சாரத்தை  சேமியுங்கள்’ என வலியுறுத்தி உள்ளார். ராஜஸ்தானில் தினசரி சுமார் 4 மணி நேர  மின்வெட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பில் போராட்டம்

பஞ்சாப்பில் விவசாயிகளுக்கு  வழங்கப்படும் இலவச மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் அம்மாநில அமைச்சர்  வீட்டின் முன்பாக நேற்று விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களும் தொழிற்சாலைகளுக்கு  மின் விநியோகத்தை குறைத்துள்ளன. வாரத்தில் ஒருநாள் உற்பத்தியை நிறுத்தவும்  அறிவுறுத்தி உள்ளன.

டெல்லி முடங்கும் அபாயம்

தலைநகர் டெல்லியில் நிலக்கரி கையிருப்பு வெறும் 2 நாட்களுக்கு மட்டுமே  இருப்பதால், மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் நிலை இருப்பதாகவும், மெட்ரோ  ரயில்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கியமான நிறுவனங்களுக்கு  தடையில்லா மின்சாரம் வழங்குவதில் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று ஆம் ஆத்மி  அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு அம்மாநில மின்துறை  அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநகருக்கு  மின்சாரம் வழங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி  கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மெட்ரோ  மற்றும் அரசு மருத்துவமனைகள் உட்பட பல அத்தியாவசிய நிறுவனங்களுக்கு 24 மணி  நேரமும் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் ஆபத்து உள்ளது,’ என கூறி  உள்ளார்.

Related Stories: