சீனாவில் மருத்துவம் படித்த 200 மாணவர்களுக்கு டாக்டர் அங்கீகாரம்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2020ல் கொரோனா பரவலால் சீனா தனது நாட்டில் மருத்துவம் படித்து வந்த இந்தியா உட்பட அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் திருப்பி அனுப்பியது. கடந்த 2 ஆண்டுகளாக படிப்பை தொடர முடியாமல், இவர்கள் பாதித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘சீனாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்களுக்கு மூன்று மாதம் பயிற்சி பணியை இந்தியாவில் அவரவர் மாநிலங்களில் கொடுத்து, அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் தொழில்முறை உறுதி சான்றிதழை வழங்க வேண்டும்,’ என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கறிஞர் பார்த்திபன் ஆகியோர், ‘சீனாவில் எம்பிபிஎஸ் படித்த இந்திய மாணவர்கள் அனைவரும் கொரோனா பிரச்னையின் காரணமாக இறுதி ஆண்டுக்கான படிப்பை ஆன்லைன் மூலம் முடித்துள்ளனர்,’ என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ‘சீனாவில் இருந்து திரும்பிய தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தேவையான மருத்துவ செய்முறை பயிற்சி வகுப்புகளை இந்தியாவிலேயே நடத்தி, இங்கேயே அவர்களுக்கு மருத்துவ அங்கீகாரம் வழங்குவது மற்றும் தொழில்முறை சான்றிதழ் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் 2 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்திய மாணவர்கள் வந்து படிக்கலாம்: சீனா அறிவிப்பு

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அளித்த பேட்டியில், `கொரோனா தொற்றினால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சீன அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய தரப்பில் இருந்து சீனா வந்து படிப்பை தொடர விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. நிறைய பேர் என்பதால் பட்டியலை தயாரிக்க இந்தியாவுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும். சர்வதேச தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த கொள்கை அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொருந்தும்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: