×

எதிர்கால திட்டத்தை தயாரித்து கொடுத்த வகையில் காங்கிரசிடம் பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டத்தை தயாரித்து கொடுத்த வகையில், காங்கிரசிடம் பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தான் காங்கிரசில் சேரும் திட்டமில்லை என்று சமீபத்தில் அறிவித்துவிட்டார். இதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைமையும், நானும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல விஷயங்கள் பேசினோம். அதில் எங்களுக்குள் ஒத்தக் கருத்துக்கள் நிறைய இருந்தன. காங்கிரசில் நிறைய தலைவர்கள் இருப்பதால், தனித்தே தேர்தலில் நிற்க முடியும் என்று கூறினார். ஆனால், அதனை நான் மறுத்தேன். நான் கட்சியில் எந்தப் பதவியும் விரும்பவில்லை. காங்கிரசின் எதிர்கால திட்டங்கள் குறித்த வியூங்களைத்தான் தயாரித்துக் கொடுத்தேன்.

காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க விரும்பிய ஆலோசனைகளை மட்டுமே வழங்கினேன். கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தனது எதிர்காலம் குறித்து முதன்முறையாக தீவிரமாக விவாதித்தது. ஆனால் அதிகாரம் பெற்ற செயற்குழுவில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. மேலும், அந்தக் குழுவின் ஒருபகுதியாக நான் இருக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும், அதற்கு கட்சித் தலைமை ஏற்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.

ஆனால், என்னால் என்ன முன்மொழியப்பட்டது என்பதை தற்போது சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்கான தலைமைக் கொள்கையை வகுத்துக் கொடுத்த விபரத்தில், ராகுலின் பெயரோ அல்லது பிரியங்கா காந்தியின் பெயரோ இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராகுல்காந்தியின் நிலையை நான் எப்படி தீர்மானிக்க முடியும்? பாஜகவின் தொடர் விமர்சனத்தால் ராகுல் காந்தியின் பிம்பம் பாதிப்பு அடைந்திருந்தாலும் கூட, அவரால் அதில் இருந்து மீண்டும் எழுந்திருக்க முடியும் என்று என்னால் கூறமுடியும். கடந்த 2002ல் மோடியின் பிம்பம் மிகவும் குறைவு.

ஆனால் இன்று நிலைமை வேறு; அதேபோல் ராகுல் காந்திக்கும் சாத்தியம். காங்கிரசின் எதிர்காலத் திட்டத்தைத் தயாரித்து வழங்கவும், ஆலோசனைகளை வழங்கவும் காங்கிரசிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை. வருகிற 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு சவாலாக யார் இருப்பார்கள் என்பது தெரியவில்லை. மாநிலத் தேர்தல்கள் மூலம் மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி பழமையான கட்சி; நாட்டின் கடைசி கிராமம் வரை ஆழமாக பரவியுள்ளது. எனவே அவர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது’ என்று கூறினார்.

Tags : Congress ,Prasant Kishore , No money bought from Congress for preparing future plan: Prasanth Kishore sensational interview
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்