திருச்சியில் பரபரப்பு; விமானம் புறப்படும் நேரத்தில் பழுது கண்டுபிடிப்பு: 120 பயணிகள் தப்பினர்

திருச்சி: திருச்சியில் இருந்து துபாய்க்கு விமானம் புறப்பட இருந்த நிலையில், பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 120 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.45 மணிக்கு துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தயாராக இருந்தது. இதில் செல்ல இருந்த 120 பயணிகளின் பாஸ்போர்ட், உடமைகள் உள்ளிட்ட ஆவணங்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தை விமானி சோதனை செய்வது வழக்கம். அதன்படி சோதனை செய்தபோது விமான இறக்கையில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் 120 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து விமானத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் இன்று பிற்பகல் துபாய் புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

Related Stories: