பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனை; உடந்தையாக இருந்த தாயிக்கு ஆயுள்: போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

சென்னை: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை சூரியனுக்கு சென்னை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. தந்தைக்கு உடந்தையாக இருந்த தாய்மாதவிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள 15 வயது சிறுமி தனது தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாக தனியார் தொண்டு நிறுவனத்திற்கு புகார் அளித்து இருந்தார். அந்த தொண்டு நிறுவன உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 வயது முதல் 15 வயது வரை தந்தை சூரியன் பாலியல் வன்கொடுமை செய்ததாகும், கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி கர்ப்பமடைந்த போது தனது தாயிடம் தெரிவித்த போது கருவை களைத்து, இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாய் மாதவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்க கூடிய போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி, காவல்துறையினர் தரப்பில் நிரூபிக்கப்பட்டது.

இதனை அடுத்து முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாகவும் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: