பஞ்சாப்பில் இரு தரப்பினரிடையே கலவரம்: கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை..!

பட்டியாலா: பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய பேரணியில் இரு தரப்பினரும் கற்கள், வாள்களை கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பட்டியாலாவில் உள்ள காலி தேவி கோவில் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போலீஸ் அனுமதியின்றி பேரணி நடத்த முயன்றனர். இதற்கு காலிஸ்தான் எதிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அப்போது மாடியில் இருந்து ஒரு தரப்பினர் சாலையில் இருந்தவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். மோதலின் உச்சமாக ஒருவரை ஒருவர் வாள் கொண்டும் தாக்க தொடங்கினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இருதரப்பும் உக்கிரமாக தாக்கிக் கொண்டதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் துரதிஷ்டமானது என தெரிவித்துள்ள மாநில முதல்வர், பஞ்சாப் மாநிலத்தின் பொது அமைத்திக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

நிலைமையை முழுமையாக கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர் டிஜிபியிடம் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: