×

கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. கோவிந்தா கோவிந்தா, கோஷம் விண்ணதிர திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது, 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 8ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.30 மணிக்கு ரங்கவிலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(29ம் தேதி) காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் வஸ்திரங்களை அணிந்து அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் 6 மணியளவில் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் முன்பு பக்தர்கள் பக்திபாடல்களை பாடிக் கொண்டு கோலாட்டத்துடன் ஆடியபடியே வந்தனர். கீழச்சித்திரை வீதியிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, காலை 10 மணியளவில் நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன்பு பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை செய்யப்பட்டது. மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் இன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். 1ம் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறும்.

Tags : Covinda ,Sriranangam Ranganadar Temple ,Siranthiram , Govinda ... Govinda ... Slogan Vinnathira Srirangam Ranganathar Temple
× RELATED 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்...