முப்படை தளபதி குறித்து மாரிதாஸ் தெரிவித்த கருத்து விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: பாஜ ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021, டிசம்பர் 9ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, மாரிதாஸ் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மறைந்த முப்படை தலைமை தளபதி குறித்த கருத்துக்களின் போது தமிழகத்தில் ஆளும் அரசாக இருக்கும் கட்சியின் பெயரை குறிப்பிட்டு தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா’ என்ற வார்த்தையை மாரிதாஸ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இதை பார்த்தால் அரசுக்கு எதிராக தவறாக நினைப்பார்கள். இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மாநிலத்தின் நேர்மை குறித்தே அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்தை பதிவு செய்தார் என விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் மாரிதாஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: