சென்னை ஆவடியில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கிசூடு பயிற்சியின் போது அருகில் இருந்த வீட்டில் குண்டு பாய்ந்தது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஆவடியில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகே உள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்தது. ஆவடி டாங் பேக்டரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துணை ராணுவ பயிற்ச்சி முகாம் உள்ளது. இந்த பயிற்சி முகாமில் காலை 11 மணியளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. அந்த பயிற்சியின் போது ஒரு வீரரின் குறி தவறி அருகாமையில் உள்ள ஒருவீட்டின் மேற்கூரையை துளைத்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தற்போது முத்தால்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, வீரர்களின் இலக்குகளுக்கு பின்னல் மணல் மூட்டை, அல்லது மணல் மேடுகள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் துப்பாக்கி குண்டுகள் பயிற்சி தளத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு முழுமையாக பாதுகாக்கப்படும். இருந்த போதும், தற்போது துப்பாக்கி குண்டு எவ்வாறு குடியிருப்பு பகுதில் உள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்துள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவடியில் அனைத்து பாதுகாப்பு துறை சம்பந்தமான அனைத்து தளங்களும் இங்கு உள்ளதால் இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. அதேபோல் இங்கு மிகுந்த பாதுகாப்புடன் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டும். இருப்பினும் தற்போது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: