நீலாம்பூர் நட்சத்திர ஓட்டல் அருகே காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் கைது

சூலூர் :  காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2  போலீஸ்காரர்களை சூலூர் போலீசார் கைது செய்தனர்.சூலூர் நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே கடந்த 26ம் தேதி கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று தங்கள் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 போலீசார் அந்த காதல் ஜோடியை மிரட்டி 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணம் தரவில்லையென்றால் காரில் விபசாரம் செய்ததாக கூறி கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன காதல் ஜோடி தங்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு தப்பித்தால் போதும் என சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக காதல் ஜோடி 27ம் தேதி கருமத்தம்பட்டி காவல் உதவி ஆணையர் ஆனந்த் ஆரோக்கியராஜிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் சூலூர் காவல் நிலைய எல்லை என்பதால் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பணம் பறித்த போலீஸ்காரர்களை தேடி வந்தனர்.

விசாரணையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்தது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலர் ராஜராஜன் (38), ஆயுதப்படை போலீசார் ஜெகதீஷ் (28) ஆகியோர் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களையும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையாலான போலீசார் நேற்று கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ராஜராஜன் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக காதல் ஜோடிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரே காதல் ஜோடிகளை மிரட்டி பணம் வசூலித்து பிடிபட்ட சம்பவம் போலீசார் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: