வருசநாடு அருகே யானை கெஜம் அருவியில் குவியும் மதுப்பிரியர்கள்-வனத்துறை ரோந்து தீவிரமாகுமா?

வருசநாடு : வருசநாடு அருகே யானை கெஜம் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர். எனவே வனத்துறை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கடமலை-மயிலை ஒன்றியம் உப்புத்துறை அருகே கண்டமனூர் வனப்பகுதியில் யானைக்கெஜம் அருவி அமைந்துள்ளது. மழை பெய்யும் நேரங்களில் மட்டும் இந்த அருவியில் நீர்வரத்து காணப்படும். இந்த அருவிக்கு செல்ல மலைப்பாதை மட்டுமே அமைந்துள்ளது. எனவே அருவிக்கு செல்ல வேண்டும் என்றால் உப்புத்துறை கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும்.

இந்த அருவியில் வனத்துறை மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொள்வது கிடையாது. இதனால் நீர்வரத்து ஏற்படும் நாட்களில் மதுப்பிரியர்கள் அருவியில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது யானை ெகஜம் அருவியில் நீர்வரத்து காணப்படுகிறது. இதனால் அருவியில் மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர். சிலர் அருவி அமைந்துள்ள பகுதியிலேயே உணவுகளை சமையல் செய்து மது அருந்தி வருகின்றனர். மேலும் போதையிலேயே அருவியில் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். கடந்த வாரம் மதுபோதையில் அருவியில் குளித்து கொண்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

இதேபோல கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது அருவியில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.கடமலை-மயிலை ஒன்றியத்தில் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் கடுமையான உத்தரவுகளை அமல்படுத்தி அதனை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் வனப்பகுதியில் அமைந்துள்ள யானை ெகஜம் அருவிக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது ஏன்?

என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து யானை ெகஜம் அருவியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அருவிக்கு வருபவர்களிடம் மதுபாட்டில் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: