உள்நாட்டு புல் தரையை மெக்ஸிகோ புல் தரையாக மாற்றவில்லை... மான்கள் உயிரிழப்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!!

சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் 5 மாதங்களில் 20 மான்கள் இறந்துவிட்டதாக வந்த செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு மான்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக கடந்த 20ம் தேதி செய்தி வெளியானது. கட்டுமான பணிகள் மற்றும் அண்மையில் ராஜ் பவனில் இயற்கையாக அமைந்த புல்வெளிகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் வெளிநாட்டுச் செடிகள் நடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெளிமான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் கடந்த 5 மாதங்களில் 20 மான்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை மறுத்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநர் மாளிகையில் ஸ்டார் தோட்டத்தில் உள்ள உள்நாட்டு புல் தரையை மெக்ஸிகோ புல் தரையாக மாற்றவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெக்சிகோ புல் தரையாக மாற்றியதால் மான்கள் தின்பதற்கு புல் கிடைக்காமல் இறந்ததாக வந்த செய்தி தவறு. திறந்தவெளி கலையரங்கம் உள்ள பிரதான புல் தரை மட்டுமே தோட்டக்கலை துறையில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். நவம்பர் 2021ல் பிரதான புல் தரை புதுப்பிக்கப்பட்டது. அது மான்களின் மேய்ச்சல் நிலமல்ல. ஆளுநர் மாளிகை வளாகம் உள்பட கிண்டி தேசிய பூங்காவை தமிழ்நாடு அரசின் வனத்துறைதான் பராமரித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் மான்கள் எதுவும் இறந்ததாக எந்த தகவலும் வனத்துறை இடமிருந்து வரவில்லை,என்றார்.

Related Stories: