கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க பெண்ணிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது-திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருச்சி : திருச்சி அருகே கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க பெண்ணிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எதுமலையை சேர்ந்தவர் ராமர். விவசாய தொழிலாளி. இவரது மனைவி அமிர்தம் (62). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் ராமர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8ம்தேதி இறந்தார். கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு அமிர்தம் எதுமலை விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி விஏஓ அலுவலகம் சென்ற அமிர்தம், அங்கிருந்த விஏஓ சுரேஷிடம் கணவரின் இறப்பு சான்றிதழ் 5 நகல்கள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் சான்றிதழ் வேண்டுமானால் ரூ.1000 லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அமிர்தம் இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அமிர்தத்திடம் கொடுத்து அனுப்பி கண்காணித்தனர். நேற்று காலை விஏஓ அலுவலகத்துக்கு சென்ற அமிர்தம், விஏஓ சுரேஷிடம் ரூ.1000 பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓவை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அலுவலக கதவு, ஜன்னல்களை மூடி அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர்.

இந்த சோதனையை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் அய்யனாபுரத்தில் உள்ள விஏஓ வீட்டிற்கு சென்று அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விஏஓ வை கைது செய்தனர். திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மாலை விஏஓ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், லஞ்ச வழக்கில் கைதான விஏஓவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து விஏஓ சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: