×

சிறையில் இருந்த தங்கமணியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரது மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த    26-4-2022 அன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7-40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8-40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு, நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Dangaman ,Chief Minister BCM ,K. Stalin , Chief MK Stalin, Thangamani, autopsy
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...