ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி : ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை!!

கீவ் : ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் சென்றுள்ள அவர், தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இருநாடுகள் இடையே போரை தடுக்கவும், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அனைத்து முயற்சிகளையும் செய்ய தவறி விட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தென் கிழக்கு உக்ரைன் நகரமான மரியுப்போலில் போராளிகளும் பொதுமக்களும் பதுங்கி இருக்கும் எஃகு ஆலையை விட்டு அவர்களை வெளியேற்றுவதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.மேலும் அவர் பேசியதாவது,21வது நூற்றாண்டில் போர் என்பது ஏற்க முடியாத ஒன்று. கட்டிடங்களில் வாழ்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் பறிபோனது. இந்த துயரம் பற்றி உலக மக்கள் சிந்திக்க வேண்டும். உலகில் போர் மூண்டால் மடிந்து போவது அப்பாவி மக்கள் மட்டுமே,என்றார்.

இதனிடையே உக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் வருகை தந்துள்ள நிலையில்,  கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா.அமைப்பு உள்பட அனைத்து பிரதிநிதித்துவத்தையும் அவமானப்படுத்தும் ரஷ்ய தலைமையின் முயற்சி என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: